சென்னை மணலி புதுநகரில் வேதகிரி (45), ஹேமமாலினி(44) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களது மகள் திருமணமாகி வெளியூரில் இருக்கிறார். இவர்களது மகன் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த வாரம் குடும்பப் பிரச்சினையின் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விரக்தியடைந்த வேதகிரி ரத்த அழுத்தத்திற்கான மாத்திரையை அளவுக்கு அதிகமாக எடுத்துள்ளார்.

இதனால் மயங்கி விழுந்த அவரைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மகன் தனது தாயாரிடம் தெரிவித்தார். இதை கேட்டு பதறிய ஹேமமாலினி வேகமாக மற்றொரு அறைக்கு சென்று அதே மாத்திரையை எடுத்து அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மகன், தாய், தந்தை இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 5 நாட்களுக்கு முன்பே ஹேமமாலினி இறந்து விட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த வேதகிரியும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.