கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணத்தூர் அருகே உள்ள கிராமத்தில் நேற்று ஊர் திருவிழா ஒன்று நடைபெற்றது. அப்போது சாமி சிலைகளை தேரில் அலங்கரித்து டிராக்டரில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது அங்குள்ள தொடக்கப் பள்ளி அருகே டிராக்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனைப் பார்த்த வனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சொக்கலிங்கம் என்பவர் தேரில் இருந்து தீயை அணைக்க முயற்சி செய்துள்ளார். அப்போது மின்சார பாய்ந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.

உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த மின்கம்பி தாழ்வாக செல்கிறது என்று கிராம மக்கள் புகார் அளித்தும், மின்சாரத்துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டியதால் இந்த நிகழ்வு ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.