யஷஸ்வி ஜெய்ஸ்வால் டி20ஐ கிரிக்கெட்டில் சதம் அடித்த இளம் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். 

2023 ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆண்கள் கிரிக்கெட் காலிறுதிப் போட்டிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் நேரடியாக காலிறுதிக்கு வந்தன, அதே நேரத்தில் நேபாளம், ஹாங்காங் மற்றும் மலேசியா அணிகள் தகுதிசுற்றில் வெற்றிபெற்றதன் மூலம்  காலிறுதி சுற்றுக்கு வந்தன. இந்நிலையில் சீனாவின் ஹாங்சோ மைதானத்தில் இன்று முதல் காலிறுதியில் நேபாளம் மற்றும் இந்தியா ஆகிய இரு அணிகள் மோதியது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ருதுராஜ் முதலில் பேட்டிங் ஆடுவதாக தெரிவித்தார். இதையடுத்து  கேப்டன் ருதுராஜ் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் களமிறங்கினர். இதில் ருதுராஜ் பொறுமையாக தொடங்கிய நிலையில், ஜெய்ஸ்வால் அதிரடியாக சிக்ஸர், பவுண்டரி என அடித்து மிரட்டினார். ஜெய்ஸ்வால் 22 பந்துகளில் அரை சதம் அடித்தார். இந்திய அணி 9.1  ஓவரில் 100 ரன்களை கடந்தது. அதன் பிறகு  ருதுராஜ் 23 பந்துகளில் 25 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து திலக் வர்மா 10 பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து போல்ட் ஆகி வெளியேறினார். இதையடுத்து  ஜிதேஷ் சர்மா 5 ரன்னில் வெளியேறினார். சிறிய மைதானமாக இருந்தாலும் இந்திய தொடக்க பேட்டர்கள் அடுத்தடுத்து வெளியேறினர்.

இருப்பினும் ஜெய்ஸ்வால் மட்டும் மறுமுனையில் அதிரடியாக ஆடினார். இதையடுத்து சிவம் துபே –  ஜெய்ஸ்வால் இருவரும் கைகோர்த்தனர். ஜெய்ஸ்வால் அதிரடியாக 48 பந்துகளில் (8 பவுண்டரி, 7 சிக்ஸர்) சதம் அடித்தார். அதன்பின் அவர் 17வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் 100 ரன்கள் குவித்து அவுட் ஆனார். தொடர்ந்து துபே மற்றும் ரிங்கு சிங் இணைந்து ஆடினர்.

இருவரும் கடைசி 2 ஓவரில் 41 ரன்கள் சேர்த்தனர். குறிப்பாக கடைசி ஓவரில் மட்டும் 25 ரன்கள் கிடைத்தது. இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் குவித்தது. சிவம் துபே 19 பந்துகளில் 25 ரன்களுடனும், ரிங்கு சிங் 15 பந்துகளில் 37 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதையடுத்து நேபாள அணி களமிறங்கி இலக்கை துரத்தி வருகிறது.

இதற்கிடையே இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டி20யில் சதம் அடித்த இளம் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். ஜெய்ஸ்வால், 21 வயது 9 மாதங்கள் மற்றும் 13 நாட்களில் டி20ஐ கிரிக்கெட்டில் சதமடித்துள்ளார். முன்னதாக நியூசிலாந்திற்கு எதிராக 23 வயது மற்றும் 146 நாட்களில் சதம் அடித்த சுப்மன் கில் செய்த சாதனையை முறியடித்தார் ஜெய்ஸ்வால்.

மேலும் கில், விராட் கோல், கே.எல். ராகுல், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோருக்குப் பிறகு டி20ஐ கிரிக்கெட்டில் சதம் பதிவு செய்த எட்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை இடது கை வீரர் ஜெய்ஸ்வால் பெற்றார். ஜெய்ஸ்வால் ஏற்கனவே டெஸ்டில் அறிமுகமாகி சதம் அடித்துள்ளார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டொமினிகாவில் நடந்த முதல் டெஸ்டில்  171 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தத்தக்கது.

நேபாளத்துக்கு எதிரான இந்திய அணி : ருதுராஜ் (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சிவம் துபே, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா (WK), வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான் மற்றும் அர்ஷ்தீப் சிங்.