
2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்திய அணி.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட தொடரின் 2வது ஒருநாள் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் ஸ்டேடியத்தில் நேற்று மதியம் 1:30 மணிக்கு தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பந்து வீசமுடிவு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் ஆடியது. ஷ்ரேயஸ் ஐயர், சுப்மன் கில் இருவரின் சிறப்பான சதம் மற்றும் சூர்யகுமார் யாதவ், கேஎல் ராகுல் இருவரின் அரைசதத்தால் டீம் இந்தியா 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது.
துவக்க வீரர் ருதுராஜ் 8 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், கில் – ஷ்ரேயஸ் ஐயர் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடி சதமடித்தனர். ஷ்ரேயஸ் ஐயர் 90 பந்துகளில் (11 பவுண்டரி, 3 சிக்ஸர்) 105 ரன்கள் எடுத்தார். கில் 97 பந்துகளில் (6 பவுண்டரி, 4 சிக்ஸர்) 104 ரன்கள் எடுத்தார். அதேபோல கடைசி கட்டத்தில் சூர்யகுமார் யாதவ் 37 பந்துகளில் (6 பவுண்டரி, 6 சிக்ஸர்) 72 ரன்கள் விளாசினார். இதனிடையே மிடில் ஆர்டரில் கேஎல் ராகுல் அதிரடியாக 38 பந்துகளில் (4 பவுண்டரி, 4 சிக்ஸர்) 52 ரன்களும், இஷான் கிஷன் 18 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர். இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு 400 என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது இந்திய அணி.

அதே நேரத்தில் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா தனது அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து வரலாற்று சாதனை படைத்தது. முன்னதாக 2013 இல் பெங்களூருவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 6 விக்கெட்டுக்கு இந்திய அணி 383 ரன்கள் எடுத்தது. இது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் 350 ரன்களுக்கு மேல் இந்தியாவின் ஏழாவது ஸ்கோர் மற்றும் ஒட்டுமொத்தமாக ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு ஏழாவது அதிகபட்ச ஸ்கோராகும்.
இதையடுத்து கடினமான இலக்கை நோக்கி ஆஸ்திரேலியாஅணியின் துவக்க வீரர்களாக மேத்யூ ஷார்ட் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் களமிறங்கினர். பிரசித் கிருஷ்ணாவின் இரண்டாவது ஓவரில் 2 மற்றும் 3வது பந்தில் ஷாட் (9) ஸ்டீவ் ஸ்மித் (0)அடுத்தடுத்து அவுட் ஆகினர். இதையடுத்து டேவிட் வார்னர் மற்றும் மார்னஸ் லாபுஷாக்னே இருவரும் சிறிய பாட்னர்ஷிப் அமைத்து களத்தில் இருந்தபோது மழை குறுக்கிட்டது. ஆஸ்திரேலிய அணி 9 ஓவரில் 56 ரன்களுக்கு 2 விக்கெட் என இருந்தது. பின் மழை நின்றதையடுத்து போட்டி மீண்டும் தொடங்கியது. மேலும் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 33 ஓவர்கள் என குறைக்கப்பட்டு, 317 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து டேவிட் வார்னர் மற்றும் லாபுஷாக்னே இருவரும் களமிறங்கினர். இதையடுத்து அஸ்வின் வீசிய 13வது ஓவரில் லாபுஷாக்னே 27 ரன்னில் அவுட் ஆனார். தொடர்ந்து 15-வது ஓவரில் அரைசதமடித்த டேவிட் வார்னர் (53 ரன்கள்) மற்றும் ஜோஸ் இங்கிலீஷ் ஆகியோரை அஸ்வின் அடுத்தடுத்து தூக்கினார். தொடர்ந்து அலெக்ஸ் கேரி 14 ரன்னிலும், கேமரூன் கிரீன் 19 ரன்னிலும், ஆடம் ஜம்பா 5 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆகினர். ஆஸ்திரேலியா அணி 140/8 என இருந்தபோது சீன் அபோட் மற்றும் ஹேசில்வுட் இருவரும் கைகோர்த்தனர்.
இலக்கை எட்டுவது கடினமாக இருந்தாலும் அபோட் அதிரடியாக ஆடி அரைசதமடித்தார். பின் சீன் அபோட்டை (36 பந்துகளில் 4 பவுண்டரி, 5 சிக்ஸர் உட்பட 54 ரன்கள்) ஜடேஜா க்ளீன் போல்ட் ஆக்கினார். மேலும் ஹேசில்வுட்டை (23 ரன்கள்) முகமது ஷமி போல்ட் ஆக்க ஆஸ்திரேலிய அணி 28.2 ஓவரில் 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணி 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், பிரசித் கிருஷ்ணா 2 விக்கெட் மற்றும் ஷமி ஒரு விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. ஷ்ரேயஸ் ஐயர் ஆட்டநாயகன் விருது வென்றார். இரு அணிகளுக்கும் இடையே 3வது ஒருநாள் போட்டி 27ஆம் தேதி ராஜ்கோட்டில் நடைபெறவுள்ளது.
Shreyas Iyer is adjudged Player of the Match for his fantastic knock of 105 runs as #TeamIndia win by 99 runs (D/L) method.
Scorecard – https://t.co/XiqGsyElAr… #INDvAUS@IDFCFIRSTBank pic.twitter.com/Ese9RyCwxy
— BCCI (@BCCI) September 24, 2023