டெல்லியில் உள்ள குலாபி நகர் பகுதியில் முகேஷ் தாக்கூர்-சுதா தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிலையில் சுதாவின் தோழி ஒருவர், 17 வயது சிறுவன் டெல்லிக்கு வேலை தேடி வந்ததாக சுதாவின் கணவரான முகேஷ் தாக்கூரிடம் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது முகேஷ் அந்த சிறுவனை தனக்கு சொந்தமான வீட்டில் தங்க அனுமதித்தார்.

அதன்படி 10 நாட்களாக சிறுவன் தங்கி வந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி இரவு நேரத்தில் முகேஷுடன் சேர்ந்து  மது அருந்தியுள்ளார். அவர்கள் இருவருக்கும் போதை அதிகமான நிலையில் சிறுவன் தான் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்று விட்டார். அதன்பின் முகேஷ் தன்னுடைய வீட்டிற்கு சென்றபோது சுதாவும், அந்த சிறுவனும் தவறாக இருந்ததை பார்த்ததும் அதிர்ச்சயடைந்தார்.

இதைத்தொடர்ந்து மறுநாள் காலை அவருடைய மனைவி சுதா வேலைக்கு கிளம்பி சென்ற நிலையில், சிறுவனிடம் சென்று நேற்று இரவு என்ன நடந்தது? என்று கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் கோபமடைந்த முகேஷ் திடீரென வீட்டிலிருந்து சிலிண்டரை எடுத்து சிறுவனின் தலையில் அடித்தார். இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அவரது உடலில் இருந்து ரத்தம் வடிந்தது.

அந்த ரத்தம் வாசல் வழியே வெளியே வருவதை கண்ட அக்கம் பக்கத்தினர் முகேஷ் தாக்கூரை அறைக்குள் வைத்து பூட்டினர். அதன் பின் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சிறுவனை கொலை செய்த முகேஷ் தாக்கூரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.