
தூத்துக்குடியில் வசித்து வரும் முதியவர் ஒருவருக்கு செல்போன் மூலம் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அந்த குறுஞ்செய்தியில் செல்போன் டவர் வைப்பதற்காக தங்களது நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதில் டவர் அமைத்தால் நல்ல வருமானம் பெற முடியும் என்று இருந்தது. அதனை நம்பிய முதியவர் குறுஞ்செய்தி அனுப்பியவரை தொடர்பு கொண்டார்.
அந்த நபர் டவர் அமைப்பதற்கான ஆவண கட்டணம், நியமன கட்டணம், பொருட்கள் செலவு, போக்குவரத்து கட்டணம் என பல்வேறு காரணங்களை கூறியுள்ளார். அதற்காக முதியவரிடமிருந்து ரூ. 40 லட்சத்து 21 ஆயிரத்து 950 பணத்தை மோசடி செய்துள்ளார். இதனை அறிந்த தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில் மோசடி செய்த குற்றவாளி சென்னை முரளி கிருஷ்ணன் என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த காவல் துறையினர் தீவிர விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து மோசடி வழக்கில் சம்பந்தப்பட்ட பல குற்றவாளிகள் காவல்துறையினரால் கண்டறியப்பட்டனர்.
அவர்கள் அருண்குமார் (27), சந்தோஷ் ராஜ் (22), ஆனந்த் (27), அப்பாஸ் (25) என்பது தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் நேற்று முன்தினம் காவல் சைபர் குற்ற பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் அந்த கும்பல் வேறு எதுவும் மோசடியில் ஈடுபட்டுள்ளதா என்று தீவிர விசாரணை நடந்து வருகிறது