
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் பல இளைஞர்களுக்கு வீடு தேடுவது மிகவும் கடினமாக உள்ளது. அவ்வாறு வீடு வாடகைக்கு கிடைத்தாலும் அதில் பல பிரச்சனைகள் உள்ளன. இந்த நிலையில் சமீபத்தில் இணையதளத்தில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளைஞர் ஒருவர் தனது ஒரு ரூம் உள்ள பிளாட்டை காட்டியுள்ளார். இந்த வீட்டின் நடுவில் நின்று கொண்டு பக்கவாட்டில் இரண்டு கைகளையும் நீட்டினால் சுவர்கள் இடிக்கிறது. மேலும் திரும்பி நின்று இரண்டு கையையும், காலையும் நீட்டினால் மறுபுறம் உள்ள இரு சுவர்களையும் தொட முடிகிறது.
அந்த அளவுக்கு மிகக் குறுகலான வீட்டில் வசித்து வருவதாக கூறியுள்ளார். பின்னர் வீட்டில் பால்கனி இருப்பதாகவும் அதனை திறந்து காட்டினார். அது மிகவும் சிறியதாக ஒருவர் நிற்க மட்டுமே கூடிய இடம் உள்ளது. இந்த வீடு குறித்து கூறிவிட்டு கடைசியாக இந்த வீட்டின் வாடகை ரூபாய் 25000 என கூறியுள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. மேலும் இவ்வளவு சிறிய வீட்டிற்கு அதிகமான வாடகை இருந்தாலும் தனது வருமானத்தில் பணம் சேமிக்க முடிவதாகவும் கூறியுள்ளார்.
சிறிய வீடாக இருப்பதால் எந்த பொருளையும் வாங்கி வைக்க முடிவதில்லை இதனால் தனக்கு குறிப்பிட்ட தொகை சேமிப்பாக மட்டுமே உள்ளது என மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதே நேரம் மும்பையில் உள்ள சில பயனர்கள் தங்களது வீட்டை ஒப்பிடும்போது இதெல்லாம் பெரிய வீடு என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சென்ற ஆண்டு இதேபோல மும்பை சேர்ந்தவர் தனது வீட்டின் வீடியோவை பகிர்ந்துள்ளார். ஒரு ரூம் மட்டுமே உள்ள வீட்டிற்கு ரூபாய் 45 ஆயிரம் வாடகை எனக் கூறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது குறிப்பிடத்தக்கதாகும்.