
ஹரியானா மாநிலத்தில், சர்கிதாவது தொகுதிக்குட்பட்ட சமஸ்தூர் கிராம மக்கள், தேர்தல் வேட்பாளருக்கு எதிராக முன்னெடுத்துள்ள சவால் வைரலாகி வருகிறது. பல ஆண்டுகளாக, அசுத்தமான மற்றும் துர்நாற்றம் வீசும் தண்ணீர் குடிநீர் என வழங்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இக்கிராமத்தில் நீண்ட காலமாக பிரச்சனைகளை சந்தித்து வந்த மக்கள், தற்போது பொறுமை இழந்து தேர்தல் சூழலில் வேட்பாளர்களிடம் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அந்தவகையில், சமீபத்தில், அந்த கிராமத்திற்கு ஓட்டு கேட்டு வந்த வேட்பாளர்களிடம் , “நீங்கள் இந்த தண்ணீரை குடித்தால் தான் நாங்கள் உங்களுக்கு ஓட்டு போடுவோம்” என கூறி மக்கள் சவால் விட்டுள்ளனர். மேலும் தங்கள் பிரச்சனைகளை ஆண்டாண்டு காலமாக முறையாக தீர்க்காத அரசியல் பிரமுகர்களுக்கு இது ஒரு பகிரங்க எதிர்ப்பாக இருப்பதாக பொதுமக்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.