அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசினார். அப்போது, “நாங்கள் நிறைய சண்டைகளை நிறுத்தினோம். அதில்  இந்தியா, பாகிஸ்தான் இடையேயான பெரும் மோதலை தடுப்பதில் தாம் முக்கிய பங்கு வகித்ததாக கூறினார். நீங்கள் சண்டையிடப் போனால், நாங்கள் உங்களுடன் வர்த்தகம் செய்ய மாட்டோம் எனத் தைரியமாக சொன்னோம்,” எனக் கூறினார்.

இதைத் தொடர்ந்து இந்தியா-பாக்கிஸ்தான் மோதல் அணு நிலைக்கு செல்லக்கூடிய நிலையில் இருந்ததாகவும், அதை தாமே தடுப்பதற்கான மூல காரணியாக இருந்த வர்த்தக பேச்சுவார்த்தைகளையே சுட்டிக்காட்டிய டிரம்ப், “நாங்கள் இந்தியாவையும் பாகிஸ்தானையும் கையாள்கிறோம். உலகத்தை ஒற்றுமையாக மாற்ற வேண்டிய தருணம் இது” என்றார். ஆனால், இந்தக் கூற்றை இந்திய அரசு முற்றிலும் மறுத்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவம் இந்தியா தரப்பை நேரடியாக தொடர்பு கொண்டு போர்நிறுத்தம் குறித்து பேசியதை இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இஸ்ரேல் பிரதமருடன் பேசும்போது, இந்தியா-பாகிஸ்தான் மோதல், காசா மோதல் மற்றும் உக்ரைன் போரை முடிக்க அவரது முயற்சிகள் குறித்து டிரம்ப் வெளியிட்ட இந்த அறிக்கைகள் தற்போது சர்வதேச அளவில் பெரும் விவாதத்துக்கு இடமளித்துள்ளன. மேலும் அமெரிக்கா எவ்வளவு நேர்மையாக இந்த நடுநிலை முயற்சிகளை மேற்கொள்கிறது என்பது குறித்து பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்துவது குறிப்பிடத்தக்கதாகும்.