திருவனந்தபுரம் மாவட்டம் வட்டப்பாறை அருகேயுள்ள தெக்கடா பகுதியில், தாய் ஒருவர் தனது மகனால் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 வயதான ஓமனா என்பவர், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தனது மகன் சந்தோஷ் அலியாஸ் மணிகண்டன் (50) என்பவரால் அடிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வட்டப்பாறை போலீசார் சந்தோஷை கைது செய்துள்ளனர்.

சந்தோஷ், செவ்வாய்க்கிழமை மாலை 7.30 மணியளவில் குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர், தனது தாயாரிடம் மதுப்பானத்திற்காக பணம் கேட்டு, அதற்கு மறுப்புச் தெரிவித்தற்காக அவரைத் தாக்கியதாக கூறப்படுகிறது.

அவர் பலமுறை ஓமனாவை கையால் அடித்து, காலால் உதைத்து கொடூரமாக தாக்கியுள்ளார். உடனடியாக 10 மணியளவில் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஓமனா, அதே இரவு 11.30 மணியளவில் உயிரிழந்தார்.

முன்பும் தனது தாயை தாக்கிய பழக்கமுள்ள சந்தோஷ், மூன்று மாதங்களாக ஓமனாவை படுக்கையிலேயே வைத்திருந்த நிலையில், இதற்குப் முன்னர் அவருடைய 2 கால்களையும், வலது கையையும் முறித்துவிட்டதாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

அவரது குடிபோதை  தாங்க முடியாத நிலை ஏற்பட்டதால், மனைவியும் குழந்தைகளும் வீட்டை விட்டு விலகிச் சென்றுள்ளனர். அவர் அடிக்கடி இதுபோன்று குடித்துவிட்டு ஊரிலும் பிரச்சனைகள் ஏற்படுத்தி வந்திருப்பதால், அக்கம்பக்கத்தவர்கள் இந்த முறை தலையிடவில்லை என்றும் கூறப்படுகிறது.