இங்கிலாந்தில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி கலந்து கொள்ள இருக்கிறது. இதற்காக வரும் ஜூன் மாதம் 20 ம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரை இங்கிலாந்து நாட்டிற்கு சென்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 5 தொடர் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறார்கள்.

இந்த டெஸ்ட் தொடர் நடைபெறுவதற்கு முன்பாகவே இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு பெறுவது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், கிரிக்கெட் வீரர்கள் பலரும் இதற்கு வருத்தம் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார். அதில் “விராட் கோலி உடன் விளையாட என்னால் முடியவில்லை என்பது அவமானமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட வீடியோவில்  இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஸ்டோக்ஸ், விராட் கோலியின் ஓய்வு குறித்து பேசினார். அதில் ”இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோலியுடன் விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை என்பதை நினைக்கும்போது அவமானமாக இருக்கிறது. இதனை நான் அவருக்கு குறுஞ்செய்தியின் மூலம் தெரிவித்தேன். அவருடன் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் மைதானத்தில் என்னை போன்ற மனநிலையை கொண்டிருப்பதால் நாங்கள் போட்டியை ரசித்து விளையாடுவோம்” என்று தெரிவித்தார்.