
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பகுதியில் ஆஷிக்அலி(31) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது உறவினர்களுடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் நான் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன். எனது நண்பர் ஒருவர் தொழில் காரணமாகவும், வீட்டு பராமரிப்பு செலவுக்காக்கும் ₹60 லட்சம் தரும்படி என்னிடம் கேட்டார்.
நாங்கள் சிறு வயதிலிருந்தே நண்பர்களாக பழகி வந்த நிலையில், நம்பிக்கையின் பெயரில் கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் எனது பெயரில் வங்கியில் கடன் பெற்று 60 லட்சம் வழங்கினேன். அதன் பிறகு கடன் தொகைக்கு மாத தவணை கட்ட எனக்கு 20 லட்சத்தி 29 ஆயிரத்து 732 அனுப்பினார். பின்னர் கடந்த 6 மாதமாக சரியான முறையில் எனக்கு கடன் தொகையை அவர் அனுப்பவில்லை. தற்போது அவர் தமிழக வெற்றி கழகத்தில் உள்ளார்.
அவரிடம் சென்று பணத்தை கேட்ட போது ரவுடிகளை வைத்து கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனக்கு சேர வேண்டிய 46 லட்சத்தை தருவதாக கூறி முத்திரைத்தாளில் எழுதிக் கொடுத்தார். ஆனால் இது நாள் வரையிலும் எனக்கு சேர வேண்டிய பணத்தை அவர் கொடுக்கவில்லை. அவர் மீது விசாரணை செய்து சட்ட ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கோரி இருந்தார்.
இதுகுறித்து தவெக நிர்வாகி முகமது கவுஸ் இடம் கேள்வி எழுப்பியபோது, பணம் வாங்கியது உண்மை தான். ஆனால் பாதி பணத்தை கொடுத்துவிட்டேன். மீதி பணத்தையும் கொடுத்து விடுவேன். ஆனால் அதற்குள் என் மீது அவர் புகார் அளித்துவிட்டார் என்று தொலைபேசி வாயிலாக விளக்கம் கொடுத்துள்ளார்.