
டெல்லியில் திரிலோக்பூரில் அசோக்குமார், மீனாட்சி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இதில் அசோக்குமார் துப்புரவு தொழிலாளியாக உள்ளார். இவர் தனது திருமணத்திற்கு புறம்பான உறவில் இருந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவி மீனாட்சி கொன்று விட்டால் எந்தவித பிரச்சனையும் இருக்காது, உறவை தொடரலாம் என்று நினைத்துள்ளார். இதனால் அவர் பலமுறை மீனாட்சியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டியுள்ளார்.
அதன்படி கடந்த 18ஆம் தேதி அன்று அசோக்குமாரும், அவரது மனைவியும் டெல்லியில் இருந்து பிரயாக்ராஜ், மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள சென்றுள்ளனர். அங்கு அவர்கள் ஆசாத் நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கி உள்ளனர். இதையடுத்து அசோக்குமார் தனது மனைவியை கூர்மையான ஆயுதத்தை பயன்படுத்தி கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். அதன் பின்பு ரத்தக்கரை படிந்த ஆடை மற்றும் ஆயுதத்தை புத்திசாலித்தனமாக அப்புறப்படுத்தி உள்ளார். அதன் பின் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து ஹோட்டல் மேலாளர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர் சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். அதில் அப்பெண் தனது கணவருடன் ஹோட்டலுக்கு வந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் அசோக் குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மேல் கண்ட விவரங்கள் தெரியவந்தது. மேலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.