ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த தொழில்முனைவோளரான மோனிக் ஜெரெமையா தனது தனிப்பட்ட படுக்கையை மாதம் 600 ஆஸ்திரேலிய டாலருக்கு வாடகைக்கு விடும் முயற்சி பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ‘ஹாட் பெட்டிங்’ (Hot Bedding) என அழைக்கப்படும் இந்த நடைமுறையில், இரண்டு நபர்கள் ஒரே படுக்கையில் தூங்கினாலும், முழுமையாக நட்பு மற்றும் ஒழுக்கத்தைக் கொண்ட ஒப்பந்தமாகவே இது அமைகிறது. எந்தவிதமான காதல் தொடர்பும், உடல் உறவுகளும் இதில் இடம்பெறாது என்பது முக்கிய அம்சமாக கூறப்படுகிறது.

மோனிக், கோவிட் பரவலுக்கு முந்தைய காலகட்டத்தில் ஒரு கல்வி நிறுவனத்தை இயக்கியவராவார். ஆனால், பெருந்தொற்று காரணமாக அவரது தொழில் முற்றாக வீழ்ச்சியடைந்தது. ஆசிரியையாக இருந்த வேலையும் ஆன்லைன் கல்விக்கு மாறியதால் அவரது தொழில் தோல்வியடைந்தது. இதனால் அவர் புதிய வழியொன்றைத் தேடிய போது இந்த ‘ஹாட் பெட்டிங்’ யுக்தியை அறிமுகப்படுத்தினார். ஆரம்பத்தில், தனது முன்னாள் காதலருடன் இத்திட்டத்தைப் பரிசோதித்தார். அது நல்ல உளவியல் நிம்மதியையும், வருமான ஆதாயத்தையும் கொடுத்ததாக அவர் கூறுகிறார்.

மோனிக் தனது அனுபவத்தை டிக்டாக்கில் பகிர்ந்த வீடியோ ஒன்று 7.6 லட்சம் பார்வைகளைத் தாண்டி வைரலானது. பலரும் இத்தகைய யுக்தி குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். “இது ஒரே அறையில் இரண்டு படுக்கைகள் இருப்பதுபோல் தான். இருவரும் ஒரே படுக்கையில் தூங்கினாலும், எல்லைகள் தெளிவாக இருக்கின்றன. ஒருவரது தனிப்பட்ட இடத்தை மற்றவர் மதிக்க வேண்டும்” என மோனிக் விளக்குகிறார். தன்னுடைய வாழ்நிலை, வேலை மற்றும் தார்மீக நம்பிக்கைகளை வைத்தே இது அவரது வாழ்க்கைக்கு பொருத்தமானதாக இருக்கிறது எனக் கூறுகிறார்.

மோனிக் தற்போது ஒரு மாடலிங் நிறுவனம் நடத்தும் தொழில்முனைவோளராகவும் செயல்படுகிறார். மேலும் அவர் இப்படி படுக்கையை பகிர்வதற்கு மாதம் 32 ஆயிரம் ரூபாய் வரையில் இந்திய மதிப்பில் சம்பாதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.