தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் சமீபத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியிணை தொடங்கிய நிலையில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டசபை தேர்தலிலும் போட்டியிட இருக்கிறார். இந்நிலையில் நடிகர் விஜய் இன்று தன்னுடைய 50-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவரைப் பற்றிய சில தகவல்களை பார்க்கலாம். கடந்த 1974 ஆம் ஆண்டு ஜூன் 22ஆம் தேதி பிரபல இயக்குனர் நடிகருமான எஸ்ஏ சந்திரசேகர் மற்றும் சோபா ஆகியோருக்கு மகனாக பிறந்தவர் விஜய்.

அந்த சமயத்தில் எஸ்ஏ சந்திரசேகர் வெற்றி இயக்குனராக வலம் வந்ததால் அவர் நான் சிகப்பு மனிதன், சட்டம் ஒரு விளையாட்டு போன்ற படங்களில் அவரை குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். நடிகர் விஜய் விசுவல் கம்யூனிகேஷன் படித்த நிலையில் நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு நடிக்க தொடங்கினார். இவர் அவருடைய அம்மா சோபாவின் திரைக்கதையில் எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.

இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெறாத நிலையில் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த செந்தூரப்பாண்டி படத்தில் நடிகர் விஜய்யை அவர் நடிக்க வைத்தார். நடிகர் விஜயின் ஆரம்பகால வளர்ச்சிக்கு அவருடைய தந்தை தான் காரணம் என்பதை எவராலும் மறுக்க முடியாது. நடிகர் விஜய்யின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் பூவே உனக்காக. கடந்த 1996 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த பூவே உனக்காக படத்தில் நடித்ததனின் மூலம் நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்த நிலையில் அடுத்தடுத்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி ஹீரோவாக உயர்ந்தார்.

தற்போது நடிகர் விஜய் ஒரு படத்திற்கு ரூ‌.200 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. நடிகர் விஜயின் திருமண வாழ்க்கைக்கும் பூவே உனக்காக திரைப்படம் தான் காரணம். அந்தப் படத்தை பார்த்த பிறகு தான் லண்டனில் இருந்த சங்கீதா விஜயை சந்திக்க கிளம்பி வந்தார். பின்னர் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள்.

இதில் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் தி கோட் படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக தளபதி 69 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு பிறகு தான் சினிமாவை விட்டு விலகி முழுமையாக அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாக விஜய் அறிவித்துள்ளார். மேலும் சினிமாவில் வெற்றி நாயகனாக ஜொலித்த தளபதி விஜய் அரசியலிலும் ஜொலிப்பாரா என்பதை வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.