
கேரளாவின் அதிகாரப்பூர்வ குடியிருப்பில் சீனியர் சுங்கத்துறை அதிகாரி, அவருடைய சகோதரி மற்றும் தாய் மரணமடைந்த நிலையில் காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் ஜி.எஸ்.டி கூடுதல் ஆணையராக பணியாற்றிய மனிஷ் விஜய் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது கூட்டு தற்கொலையாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதில் 4 நாட்கள் விடுப்புக்குப் பிறகு மனிஷ் வேலைக்கு செல்லாததால், அவரது சக ஊழியர்கள் அவரை தொடர்புகொள்ள முயன்றனர். ஆனால் தொடர்ந்து போன் கால் செய்த பிறகும் பதில் வராததால், அவர்கள் அவரது வீட்டிற்குச் சென்று பார்த்தனர். அங்கு ஒரு துர்நாற்றம் வீசியதை உணர்ந்த அவர்கள், ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தபோது ஒருவர் தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்ட போது மேலும் இரண்டு உடல்கள் கிடந்தன. மனிஷ் மற்றும் அவரது சகோதரி ஷாலினி வெவ்வேறு அறைகளில் தூக்கிட்டு சடலமான நிலையில் இருந்தனர், அவர்களின் தாயார் ஷகுந்தலா படுக்கையில் இறந்த நிலையில் கிடந்தார்.
திரிக்காக்கரா போலீசார் இந்த வழக்கை இயற்கை எதுவல்லாத மரணம் என பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். அந்த வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால் உடல்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். ஜார்கண்டை சேர்ந்த இந்த குடும்பம் கடந்த ஒரு வருடம் மற்றும் ஆறு மாதங்களாக அதிகாரப்பூர்வ குடியிருப்பில் வசித்து வந்தனர். அவர்கள் மிகவும் தனிமையாக வாழ்ந்ததாகவும், அண்டை வீட்டாருடன் அதிகமாக பழகிக்கொண்டதில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.