தமிழ்நாட்டில் புதிய திட்டமான “தமிழ்நாடு மலையேற்ற திட்டம்” துணை முதல்வர்  உதயநிதி  ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் வனப் பகுதிகளில் பாதுகாப்பாக மலையேறுவது மிக எளிதாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பசுமையான 40 பகுதிகளை உள்ளடக்கிய மலையேற்ற வழித்தடங்களை இந்தத் திட்டத்தின் மூலம் உருவாக்கியுள்ளது. இணையவழி மூலம் முன்பதிவு செய்து சுற்றுலாப் பயணிகள் தங்களது பயணங்களை மேற்கொள்ள www.trektamilnadu.com என்ற அரசு அதிகாரப்பூர்வமான இணைப்பக்கத்தையும் தொடங்கியுள்ளார்.

இத்திட்டத்தின் மூலம் வனப்பகுதியில் எந்தவித உயிர் சேதமும் இன்றி வன உயிரினங்களின் பாதுகாப்பு கருதி வன அனுபவக் கழகம் மற்றும் தமிழ்நாட்டு வனத்துறையினரின் முன்னேற்பாடுகளில் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் வனப்பகுதியில் வாழும் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த மலையேற்றத்திற்கு உதவியாளராக வனப்பகுதியில் உள்ளவர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இந்த மலையேற்ற உதவியாளர்களுக்கு தேவையான அடிப்படை பொருட்கள், முதலுதவி பொருட்கள், குடிநீர், உணவு, தகவல் தொடர்பு சாதனங்கள் போன்றவை அளிக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் 18 வயதுக்கு மேற்பட்டோர் மலை ஏறுவதற்காக அனுமதிக்கப்படுவர். அரசு அனுமதித்துள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே இதற்கான முன் பதிவு செய்து கொள்ள முடியும். இணைய வழி மூலம் பணப் பரிவர்த்தனையும் செய்து கொள்ளலாம். தங்களது பயணச்சீட்டினை இணைய மூலமே பெற்றுக் கொள்ள முடியும். 18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் சரியான பாதுகாவலர் மற்றும் பெற்றோர்களின் கண்காணிப்பில் ஒப்புதல் கடிதம் பெற்ற பின்னரே மிக எளிய மலை ஏற்ற பாதைகளில் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.