
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பாக சுய உதவிக் குழுவுக்கு ரூ. 15 லட்சம் வரை கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் சேர்ந்து பயன் பெறுவது எப்படி என்பதை குறித்து காணலாம். சுய உதவிக் குழுவில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு இந்த கடன் உதவி வழங்கப்படுகிறது. குழு தொடங்கி 6 மாதம் நிறைவடைந்து இருக்க வேண்டும். அதிகபட்சம் 20 பேர் கொண்ட குழுவுக்கு 15 லட்சம் ரூபாய் கடன் உதவி வழங்கப்படும். குழு உறுப்பினர் ஒருவருக்கு அதிகபட்சம் 1.25 லட்சம் வழங்கப்படுகிறது. இதற்கு ஆண்டு 6 சதவீதம் வட்டி, இந்த கடனை திருப்பி செலுத்துவதற்கு 2 1/2 ஆண்டுகள் காலம் அவகாசம் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் வகுப்பினர் மட்டுமே பயன்பெற முடியும். அவர்களது ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். வயது 18 முதல் 60 வரை இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க பிறப்பு சான்றிதழ், சாதி மற்றும் வருமான சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம் அவசியம் வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அலுவலகங்கள், இந்த துறையின் www.tabcedco.tn.gov.in இணையதளம் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகங்கள், மாவட்டம் மத்திய நகர கூட்டுறவு வங்கிகள் கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகிய இடங்களில் விண்ணப்பிக்கலாம்.
பயனாளிகளுக்கு கடன் தொகை வழங்குவதற்கும், வசூல் செய்வதற்கும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், தமிழ்நாட்டு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் ஆகிய துணை முகவர்களால் அங்கீகரிக்கப்பட்டவை. இந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட வங்கியில் பரிசீலனை செய்யப்படும். அதன் பின்னர் அவர்கள் பயனாளியின் செயல்பாடு, தகுதி, கடனை திருப்பி செலுத்தும் திறன் குறித்து ஆய்வு செய்யப்படும். கடனை சரியான நேரத்தில் திரும்ப செலுத்தவில்லை என்றால் ஆண்டுக்கு 5% அபராத வட்டி வசூலிக்கப்படும். கடன் கொடுத்ததும், சம்பந்தப்பட்ட வங்கியில் இருந்து கடன் தொகை அட்டை வழங்கப்படும். கடன் வாங்கியவர் அந்த அட்டையை ஒவ்வொரு முறையும் வங்கிக்கு எடுத்துச் சென்று காண்பிக்க வேண்டும் என்று கூறினார்.