
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் லட்சுமி பிரியா என்பவர் வசித்து வந்துள்ளார். பேராசிரியரான இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் இவரது வீட்டிற்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் “நாங்கள் போலீஸ் என்றும் உங்கள் வீட்டை சோதனை இட வந்துள்ளோம்” என்று கூறி போலி அடையாள அட்டையை காண்பித்துள்ளனர். இதனையடுத்து தனது வீட்டில் உள்ள 17 சவரன் நகை பணம் லேப்டாப் உள்ளிட்டவற்றை பேராசிரியர் காண்பித்த போது அவற்றை எடுத்து சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த பேராசிரியை ஆற்காடு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது. சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி அதில் வந்தவர்களிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் பேராசிரியர் வீட்டில் நூதன திருட்டில் ஈடுபட்ட கும்பல் என தெரியவந்தது. பின்னர் ராஜசேகர், காதர், ஜெகன், விக்னேஷ், கார்த்திகேயன், பிரகாஷ் உள்ளிட்ட 6 பேரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த லேப்டாப், செல்போன், 17 சவரன் தங்க நகைகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.