கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குறண்டி பகுதியில் சுடலையாண்டி என்பவர் 500 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை சுடலையாண்டி ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுள்ளார். முன்னதாக வயலில் 60 ஆட்டுக்குட்டிகளை 2 கூண்டுகளில் அடைத்து சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்த போது வயலில் தீப்பிடித்து எரிந்து 60 ஆட்டுக்குட்டிகளும் தீயில் கருகி இறந்து கிடப்பதை கண்டு சுடலையாண்டி கதறி அழுதார்.

இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், யாரோ ஒருவர் பீடியை அணைக்காமல் தூக்கி வீசியதால் தீ விபத்து ஏற்பட்டு ஆட்டுக்குட்டிகள் இறந்ததாக தெரிகிறது. ஆனாலும் யாராவது தீ வைத்துவிட்டு சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.