
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் 13-வது வார்டு பகுதியில் முனியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே கொட்டகை அமைத்து ஐந்து ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று காலை ஆடுகளின் சத்தம் கேட்டு முனியசாமி அங்கு சென்று பார்த்தார். அப்போது வெறிநாய்கள் ஒன்று சேர்ந்து ஆடுகளை கடித்து கொன்றதை கண்டு முனியசாமி அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து அறிந்த பேரூராட்சி அலுவலர்கள் இறந்த ஆடுகளின் உடல்களை கைப்பற்றி ஊருக்கு அருகே புதைத்தனர். அந்த பகுதியில் வெறிநாய்கள் கடித்து ஏற்கனவே 50-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியானது குறிப்பிடத்தக்கதாகும். வெறிநாய்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே பேரூராட்சி நிர்வாகத்தினர் இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.