
உத்தரப்பிரதேசத்தின் அம்பேத்கர் நகர் மாவட்டம், ஜலால்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரா ரசூல்பூர் கிராமத்தில் சனிக்கிழமை மாலை இரு சிறுமிகள் தற்கொலை செய்துகொண்டது மிகவும் வேதனையூட்டும் சம்பவமாக அமைந்துள்ளது.
வீட்டிலுள்ள மின்விசிறியில் கயிற்றில் தொங்கிய நிலையில் ஆஞ்சல் மற்றும் பல்லவி என்ற இரு சகோதரிகளின் உடல்களும் குடும்பத்தினரால் கண்டெடுக்கப்பட்டது. தகவலின்படி, ஆஞ்சல் இடைநிலை வகுப்பில் படித்து வந்தார், பல்லவி பத்தாம் வகுப்பு மாணவி ஆவார்.
சம்பவத்திற்குக் காரணமாக, 2 சிறுமிகளும் மொபைல் போனில் யாரோ ஒருவருடன் பேசியதாகவும், அதை கண்ட தந்தை அவர்களை கடுமையாகத் திட்டி அடித்ததாகவும் கூறப்படுகிறது. தந்தையிடம் அவர்கள் இருவரும் யாரிடம் பேசினார்கள் என்பதை பற்றிக் கூறவில்லையென என இருவரையும் தாக்கியதாகவும் தெரிகிறது.
இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான இருவரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. உடனடியாக வீட்டினரால் போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து அம்பேத்கர் நகர் மாவட்ட எஸ்பி கேசவ் குமார், “மொபைல் போனில் பேசியதைத் தொடர்ந்து ஏற்பட்ட குடும்ப வாதத்தால் இந்த தற்கொலை சம்பவம் நடந்திருக்கலாம். தந்தை குழந்தைகளை அடித்ததாக கூறப்படுகிறது. தற்போது பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இது தற்கொலைதான் என்பதை உறுதி செய்ய பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பெற்றோர் மற்றும் குழந்தைகள் இடையே நம்பிக்கையின் குறைபாடு எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கான துயரமான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.