
இண்டிகோ விமான நிறுவனத்தின் பெண் பயணிகளுக்கான புதிய முன்முயற்சி
இண்டிகோ விமான நிறுவனம், பெண் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் சிறப்பு முயற்சியை புதன்கிழமை அறிவித்தது. இதன் மூலம், இனி பெண்கள் இணைய Check-in செய்யும் போது, தங்களின் அருகில் எந்த இருக்கைகளை வேறு பெண்கள் முன்பதிவு செய்துள்ளனர் என்பதை பார்க்க முடியும். இதன் மூலம் தங்களுக்கு ஏற்ற இருக்கைகளை தேர்வு செய்து கொள்ளலாம்.
பெண் பயணிகளின் “பயண அனுபவத்தை அதிக வசதியாக மாற்றுவதற்காக” சந்தை ஆராய்ச்சிக்குப் பிறகு இந்த அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. “பெண் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்த விரும்பும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துவதில் இண்டிகோ பெருமைப்படுகிறது. இது சந்தை ஆராய்ச்சி அடிப்படையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தற்போது சோதனை முறையில் இயங்கி வருகிறது. இது எங்கள் #GirlPower கோட்பாட்டுடன் ஒத்துப்போகிறது” என்று விமான நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“எங்கள் அனைத்து பயணிகளுக்கும் ஒப்பற்ற பயண அனுபவத்தை வழங்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம், இந்த புதிய அம்சத்தை அடைவதற்காக நாங்கள் எடுக்கும் பல நடவடிக்கைகளில் ஒன்று” என்று இண்டிகோ கூறியுள்ளது. கடந்த சில மாதங்களில் பெண்கள் தொடர்பான சில வைரல் சம்பவங்கள் செய்தித்தாள்களில் தலைப்புச் செய்திகளாக மாறிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, ஏர் இந்தியா விமானத்தில் ஒரு ஆண் பயணி தன்னுடன் பயணம் செய்த பெண் பயணிகளின் மீது சிறுநீர் கழித்த அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்தது. பின்னர், குற்றவாளி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதேபோல், இண்டிகோ விமானத்தில் மற்றொரு அதிர்ச்சிதரும் சம்பவம், 2023 ஜூலை மாதம் நடந்தது. டெல்லி-மும்பை வழித்தடத்தில் பயணம் செய்தபோது, பேராசிரியர் ஒருவர் மருத்துவரை பாலியல் துன்புறுத்தினார். அதைத் தொடர்ந்து 2023 செப்டம்பரில் மும்பை-குவஹாட்டி இண்டிகோ விமானத்தில் ஒரு பெண் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது.