மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே அருகே உள்ள பெங்களூரு நெடுஞ்சாலையில் சனிக்கிழமை அதிகாலை நடைபெற்ற கோர விபத்தில், மதுபோதையில் சென்ற 4பேர் பயணித்த மெர்சிடிஸ் கார் ஒன்று  பைக் மீது  மோதியதில்  இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். அந்த  விபத்தில் உயிரிழந்தவர் சிஞ்ச்வாடைச் சேர்ந்த  பி.சி.ஏ மாணவர் குனால் ஹுஷார்(23) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும்  அவருடன் பயணித்த  ப்ரஜ்யோத் பூஜாரி(21) என்பவரும் படுகாயமடைந்துள்ளார். இந்த விபத்தால் கார் வாட்கான் பாலத்தில் இருந்த தடுப்பு சுவரை  உடைத்துவிட்டு கீழே உள்ள சர்வீஸ் சாலையில் விழுந்தது.இதில் விபத்துக்குள்ளான மெர்சிடிஸ் காரில் பயணித்த 4 பேர்களில்  கார் ஓட்டியவர் நிக்டியைச் சேர்ந்த ஷுபம் போசாலே (27)  என தெரியவந்துள்ளது.

மேலும் காரில் பயணித்த மற்ற 3 பேர்  நிகில் ரணவாடே (26), ஷ்ரேயாஸ் சோலங்கி (25), மற்றும் வேதாந்த் ராஜ்புத் (28) ஆகியோர் ஆவர்.  இதில் காரில் இருந்த 4 பேரும் மதுபோதையில் இருந்ததாக புனே காவல்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்தில் இருந்து ஒரு காலியான மதுபாட்டிலும்  கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக புனே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து,  விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.