இந்தியாவின் 14-வது குடியரசு தலைவரான ராம்நாத் கோவிந்த் கடந்த 1945-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி பிறந்தார். இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை பீகார் மாநிலத்தின் ஆளுநராக இருந்துள்ளார். இதனையடுத்து 2017-ஆம் ஆண்டு ராம்நாத் கோவிந்த் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில் கான்பூர் பல்கலைக்கழகத்தில் சட்ட கல்வி பயின்ற ராம்நாத் கோவிந்த் தில்லி நீதிமன்றத்தில் தொழில் முறை வழக்கறிஞராக வேலை பார்த்து வந்துள்ளார். சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினர், பெண்கள், ஏழைகள் ஆகியோருக்கு புதுடெல்லியில் இருந்து இலவச சட்ட உதவி மன்றத்தின் மூலம் உதவி செய்துள்ளார். கடந்த 1977-ஆம் ஆண்டிலிருந்து 1979-ஆம் ஆண்டு வரை ராம்நாத் கோவிந்த் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசின் பதில் சட்ட ஆலோசகராக தனது கடமையை செய்துள்ளார்.

மேலும் 1977-78 காலப்பகுதியில் அப்போதைய பிரதம மந்திரி மொரார்ஜி தேசாயின் தனிப்பட்ட உதவியாளராக வேலை பார்த்துள்ளார். கடந்த 1998 முதல் 2000- ஆம் ஆண்டு வரை பாரதிய ஜனதா கட்சியில் பட்டியல் மற்றும் பழங்குடியினத்தவர் பிரிவின் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த் அகில இந்திய கோலி சமாஜின் தலைவராகவும் பதவி வகித்தார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக அமித்ஷாவால் அறிவிக்கப்பட்டவர் ராம்நாத் கோவிந்த். பின்னர் தேர்தலில் வெற்றி பெற்று ஜூலை மாதம் 25-ஆம் தேதி இந்தியாவின் 14 வது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நாத் கோவிந்துக்கு நீதிபதி ஜே.எஸ் சேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தது குறிப்பிடத்தக்கதாகும்.