கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பெற்றோர்களை கொண்டாடுவோம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, ஒவ்வொரு மாணவரும் தமிழ்நாட்டின் சொத்து. கல்வித்துறையில் திராவிட மாடல் அரசு சாதனைகளை செய்து வருகிறது. அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளி கல்வித்துறையை இந்திய அளவில் இரண்டாவது இடத்திற்கு உயர்த்தியவர். அன்பில் மகேஷ் பதவியில் இருக்கும் காலம் பள்ளிக் கல்வித் துறையின் பொற்காலம்.

பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் மீது இருக்கும் அக்கறை தமிழக அரசுக்கும் உள்ளது. இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை சிறப்பாக செயல்படுத்துகிறது. தேசிய கல்வி கொள்கை என்பது சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் கொள்கை. தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் வேட்டு வைக்கும் கொள்கை. நாங்கள் தேசிய கல்விக் கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என கூறினார். மேலும் ஒன்றிய அரசின் கொள்கைகளால் என்னென்ன பாதிப்புகள் வரும்? எதிர்ப்புக்கான காரணங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் கூறியதாவது, நாம் கடைப்பிடிக்கும் சமூக நீதி கொள்கையை நீர்த்துப் போகச் செய்வது.

பட்டியலின பழங்குடியின இதர பிற்படுத்தப்பட்டோருக்கு நாம் உதவித் தொகை வழங்கி வருகிறோம். ஆனால் ஒன்றிய அரசு கொள்கை இதை மறுக்கிறது. 3-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு எனப் பொதுத்தேர்வு வைத்துப் பிள்ளைகளை வடிகட்டப் பார்க்கிறார்கள். 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை செமஸ்டர் தேர்வு முறையைக் கொண்டுவரப் பார்க்கிறார்கள். இதனால் நம் பிள்ளைகள் விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடத்தில் சேர முடியாது. 10ம் வகுப்பு முதல் பட்டயப் படிப்பு வரை உள்ள மாணவர்கள், படிப்பைத் தொடர விரும்பவில்லை என்றால் அவர்களாகவே வெளியேறலாம் என சொல்கிறார்கள். இது படிக்காமல் போ என்று சொல்வதற்கு சமம் இல்லையா? படித்து முன்னேற போகிறவர்களை மீண்டும் குலத்தொழிலை நோக்கிக் கொண்டு செல்ல பார்க்கிறார்கள்