தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் இன்று தன்னுடைய 50-வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவருக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்று அரசியல் கட்சியினை தொடங்கியுள்ள நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது பாஜக கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை மற்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இன்று பிறந்த நாள் கொண்டாடும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான, சகோதரர் திரு. விஜய் அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சகோதரர் திரு விஜய் அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோன்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள x பதிவில், தனித்துவமிக்க நடிப்பு, ஈர்க்கும்படியான நடனம், ரசிக்கத்தக்க நகைச்சுவை, கதாபாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு, உயிரோட்டமாகப் பிரதிபலிக்கும் திறன் என எல்லா ஆற்றல்களையும் வளர்த்துக்கொண்டு மக்களை மகிழ்வித்து, தமிழ்த்திரைத்துறையில் உச்சம் தொட்ட ஆகச்சிறந்த திரைக்கலைஞன்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.