ஒவ்வொரு வருடமும் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டு புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது ஜனவரி 1-ம் தேதியை புதிய வாக்காளர் தகுதி ஏற்படுத்தும் நாளாக  அதாவது 18 வயது நிரம்பியவர்கள் ஓட்டுப்போட விண்ணப்பிக்கும் நாளாக கருதி புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட இருக்கிறது. இதற்கு முன்னதாக பழைய வாக்காளர் பட்டியல்கள் திருத்தப்பட வேண்டும். அந்த பணிகள் இன்று முதல் தொடங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு வசதியாக இன்று காலை 10 மணி அளவில் வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாநகராட்சி கமிஷனர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் வெளியிடுகிறார்கள்.

இந்நிலையில் திருத்த பணிகள் நடைபெறும்போது வாக்காளர்கள் அனைவரும் தங்களுடைய பெயர் சரியாக இருக்கிறதா, தங்களுடைய விவரங்கள் சரியான முறையில் இருக்கிறதா போன்றவற்றை வரைவு வாக்காளர் பட்டியலை பார்த்து சரி பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் ஜனவரி 1-ம் தேதிக்குள் 18 வயதில் நிரம்பியவர்கள் புதிய வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நிலையில் இன்று முதல் திருத்த பணிகளும் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.