
சென்னை வில்லிவாக்கத்தில் தமிழக வெற்றிக்காக தலைவர் விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பேனர் வைக்கப்பட்டது. அந்த பேனர் சரிந்து விழுந்து ஒரு முதியவர் காயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் போலீசார் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த சதீஷ், சந்தோஷ், ஜெகன் ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் அவர்களின் உத்தரவு மற்றும் அன்பு கட்டளையின்படி கழகத்தின் சார்பில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும் விழாக்களும் உரிய அனுமதி உடன் மிகுந்த கண்ணியத்துடன் கட்டுப்பாடுடன் இருப்பதை கழக நிர்வாகிகள் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்.
இதுவரை எந்த சூழலிலும் பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்களும் விளம்பர பதாகைகளும் கழகம் சார்பில் வைக்கப்படவில்லை. நம் வெற்றி தலைவர் அவர்களும் பேனர்கள் மற்றும் விளம்பர பதாகைகள் வைப்பதை விரும்புவதோ ஊக்கப்படுத்துவதோ இல்லை.
எனவே கழகத் தலைவரின் உத்தரவை மாநிலம், மாவட்டம், நகரம், ஒன்றியம், பேரூர், கிளை, கழகம் மற்றும் சார்பு அணிகள் உள்ளிட்ட கழகத்தின் அனைத்து நிலையிலான அமைப்புகளும் மிகவும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும், நெடுஞ்சாலை ஓரங்களிலும் கழகத்தின் சார்பில் பேனர்கள் எந்த காரணத்திற்காகவும் அறவே வைக்க கூடாது.
இது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையும் காவல்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிந்து கழக வழக்கறிஞர்கள் அணியின் உதவியுடன் செயல்பட வேண்டும் என்று கழக நிர்வாகிகள் தோழர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
