அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், வெளிநாட்டு மாணவர்களை ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ப்பதற்கான தகுதியை ரத்து செய்துள்ளது. தற்போது ஹார்வர்டில் 6,793 வெளிநாட்டு மாணவர்கள் பயின்று வருகின்றனர். இது மொத்த மாணவர்களில் 27% ஆகும். இவர்களில் சுமார் 800 பேர் இந்திய மாணவர்களே எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தீர்மானம் கடந்த வியாழக்கிழமை அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) மூலம் எடுக்கப்பட்டது.

இந்தத் தடை விதிக்க காரணமாக, கடந்த சில வாரங்களாக ஹார்வர்ட் பல்கலைக்கழகமும், அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையும் இடையே ஏற்பட்ட பதற்றம் தான் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஏப்ரல் 30-க்குள், சட்டவிரோத மற்றும் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்களுக்கான பதிவுகளை, ஹார்வர்ட் வழங்க வேண்டுமெனக்  அமெரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் ஹார்வர்ட் அளித்த தகவல்கள் போதுமானதல்ல என டிரம்ப் நிர்வாகம் கூறியதால், SEVP (Student and Exchange Visitor Program) சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், ஹார்வர்ட் பல்கலைக்கழகம் தற்காலிகமாக வெளிநாட்டு மாணவர் சேர்க்கையை இழந்துள்ளது. இந்த விவகாரம், தற்போது படித்து கொண்டிருக்கும் மாணவர்களையும் பாதிக்கிறது. அவர்களுக்கு 72 மணி நேரத்தில் அரசு கேட்டுள்ள அனைத்து விவரங்களையும் வழங்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும். கூடுதலாக, அவர்கள் வேறு பல்கலைக்கழகங்களுக்கு இடமாற்றம் பெறவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை, அமெரிக்காவில் கல்வி பெற்று வர விரும்பும் உலக நாடுகளின் மாணவர்களுக்கு ஒரு பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. மேலும், இது ஹார்வர்டின் கல்வி வர்த்தகத்தையும், அதன் சர்வதேச புகழையும் கேள்விக்குறியாக்கும் என்று விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.