
காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனால் பாகிஸ்தான் இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அதற்கு அவ்வப்போது இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்து வருவதோடு அவர்களின் தாக்குதலை இந்திய வான் பாதுகாப்பு படை முளையிலேயே கிள்ளி எறிவது போல் வானில் வைத்து பொசுக்குகிறது. இந்தியாவின் முப்படைகளும் களத்தில் இறங்கி பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வரும் நிலையில் இந்திய ராணுவத்தால் மொத்த நாடே நெகிழ்ச்சி அடைந்துள்ளது.
இந்நிலையில் இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இருந்து பேரணி தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பேரணி தொடங்கிய நிலையில் ஒரு பக்கம் கிறிஸ்தவ மத போதகர்களும் மற்றொரு பக்கம் இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள். மேலும் நாட்டில் மத ஒற்றுமையையும் தேச நலனையும் பாதுகாக்கும் விதமாக கையில் தேசிய கொடியை ஏந்தியயவாறு இந்த பேரணி தொடங்கியுள்ளது.
இந்தப் பேரணியில் மாணவ மாணவிகள், தமிழக டிஜிபி, முன்னாள் ராணுவ வீரர்கள், அமைச்சர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இந்த பேரணி டிஜிபி அலுவலகம் முதல் போர் நினைவுச் சின்னம் வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.