கொல்கத்தாவின் ஜாதவ்பூர் என்னும் பகுதியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை நடந்த ஒரு கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சிகரமானதாக இருக்கிறது. அதாவது அப்பகுதியில் 15 வயது சிறுமி தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமியை வீட்டின் 2 வது மாடி பால்கனியிலிருந்து சொந்த தந்தையே கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது கை, கால், தொடை மற்றும் கழுத்தில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. அதோடு அவரது வலது காலும் முறிவடைந்துள்ளது.

இது தொடர்பாக பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் கேட்டரிங் பிசினஸ் செய்யும் அந்த சிறுமியின் தந்தையை காவல் துறையினர் கொலை முயற்சி குற்றச்சாட்டில் கைது செய்தனர். இந்நிலையில் சிறுமி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் தனது தந்தைதான் தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் பக்கத்து வீட்டுக்காரரின் அந்த தகவலை போலீசார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. மேலும் சிறுமிக்கு தீவிர சிகிச்சை வழங்கப்படுவதால் அவர் பேசும் நிலையில் இல்லை. சிறுமிக்கு சுயநினைவு வந்த பிறகு தான் அவரிடம் பேசி உண்மையை தெரிந்து கொள்ள முடியும் என்று காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.