
மாற்றுத்திறனாளிகள், மூத்தக்குடிமக்கள் போன்றோருக்கு ரயில் பயணங்களில் கட்டண சலுகை கிடைக்கும் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. எனினும் சில கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ரயில் பயண கட்டணத்தில் சலுகை கிடைக்கும் என்பதை அறிந்திருக்க மாட்டார்கள். அதன்படி இந்தியன் ரயில்வேயில் காச நோயாளிகளுக்கு ரயில் கட்டண தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்தகைய நோயாளிகள் முதல் வகுப்பு ஏசி, 2-ம் வகுப்பு ஏசி மற்றும் ஸ்லீப்பர்களில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கட்டணத்தில் 75% தள்ளுபடி பெறுகின்றனர். நோயாளி உடன் பயணம் செய்யும் உதவியாளரும் கட்டணத்தில் சலுகை பெறுகிறார்.
இதையடுத்து இதய நோயாளிகள் தங்களது அறுவை சிகிச்சைக்காகவும், சிறுநீரக நோயாளிகள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை (அ) டயாலிசிஸிற்காகவும் சென்றால் அவர்களுக்கு ரயில்வே கட்டணத்தில் பெரும் தள்ளுபடி கிடைக்கும். அதோடு புற்று நோயாளிகள் சிகிச்சைக்காக எங்காவது சென்றால் ஏசி நாற்காலி வகுப்பில் 75% வரையிலும் தள்ளுபடி கிடைக்கும். ஏசி-3 மற்றும் ஸ்லீப்பரில் 100% சலுகையானது கிடைக்கும். இரத்த சோகை நோயாளிகளுக்கு ஸ்லீப்பர், ஏசி நாற்காலி கார், ஏசி-3 அடுக்கு மற்றும் ஏசி-2 அடுக்கு போன்றவற்றில் 50% ரயில் கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது தவிர ஹீமோபிலியா நோயாளிகளுக்கு 2-ம் வகுப்பு, ஸ்லீப்பர், முதல் வகுப்பு, ஏசி-3, ஏசி நாற்காலி கார் போன்றவற்றில் 75% தள்ளுபடி கிடைக்கும்.