
புனேவில் பிம்ப்ரி பகுதியில் வசித்து வந்த பெண் சதி ரெட்டி (20). இவர் அதே பகுதியில் உள்ள புகழ்பெற்ற பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் சதி ஜனவரி மாதம் 5ஆம் தேதி மாலை 4 45 மணியளவில் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் 15 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார். இது குறித்து அறிந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் விசாரணை நடத்தினர். ஆரம்பத்தில் விபத்து காரணமாக இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம் என வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த நிலையில் சதி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது தோழி ஒருவருக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பியுள்ளார். அந்தக் குறுஞ்செய்தியில் அவரது மொபைல் போனுக்கான கடவுச்சொல் மற்றும் அதே குடியிருப்பு வளாகத்தில் வசிக்கும் பல நண்பர்களின் தொடர்பு எண்களும் இருந்துள்ளன. சதியின் தோழி இந்த குறுஞ்செய்தியை அவரது குடும்பத்திற்கு தெரிவித்துள்ளார். அவர்கள் சதியின் மொபைல் போனை திறந்து பார்த்தபோது அவரது நண்பர் பிரணவின் மூன்று குரல் பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்தப் பதிவுகளை பார்த்த பின்பு சதியின் வகுப்புத் தோழனான பிரணவின் துன்புறுத்தலால் தான் சதி தற்கொலை செய்து கொள்ளும் முடிவை எடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து சதியின் தந்தை கலுகோடா வெங்கடசிவா ரெட்டி (54), காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து புனேவில் வகாட் பகுதியை சேர்ந்த பிரணவ் (20) என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சதியும், பிரணவும் காதலில் இருந்துள்ளனர். இந்த உறவை பயன்படுத்தி பிரணவ் சதியை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தி உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.