
கேரள மாநிலத்தில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டுவது அசுத்தம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பொது இடங்களில் குப்பையை கொட்டினால் ரூபாய் 5000 அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு நகர்களிலும் ஆங்காங்கே ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருச்சூர் மாவட்டத்தில் குன்னங்குளம் அருகே பொது இடத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஒருவர் குப்பையை வீசி விட்டு பைக்கில் வேகமாக சென்றுள்ளார்.
இதனை நகர சபை தூய்மை பணியாளர் ஒருவர் எடுத்துப் பார்த்துள்ளார் அந்த குப்பைகளில் வீட்டில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள் இருந்துள்ளன. அதன் பின் நகர சபை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு குப்பையை வீசி சென்றவர் குறித்த தகவலை கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து அவரது செல்ஃபோன் எண்ணும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனே இன்ஜினியரை தொடர்பு கொண்டு நகர சபை அதிகாரிகள் உங்களது வீட்டிற்கு ஒரு கொரியர் வந்துள்ளது. அதில் முகவரி சரியாகத் தெரியாததால் முழு விவரங்களையும் தெரிவிக்கும்படி கூறியுள்ளனர்.
இதனை கேட்ட இன்ஜின்யர் தனக்கு ஏதோ முக்கியமான கொரியர் வந்துள்ளது என நினைத்து முகவரியை கூறியுள்ளார். கூறிய உடனே நகர சபை ஊழியர்கள் பார்சல் உடன் அவரது வீட்டிற்கு சென்று கொடுத்துள்ளனர். இதனை வாங்கிய இன்ஜினியர் அதைப் பிரித்துப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போதுதான் அவருக்கு தான் ரோட்டில் வீசி சென்ற குப்பைகள் நினைவுக்கு வந்தது. இதன்பிறகு நகர சபை அதிகாரிகள் சாப்ட்வேர் இன்ஜினியருக்கு ரூபாய் 5000 அபராதம் விதித்தனர்.