
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் இயர்போன்கள் மற்றும் ஹெட்போன்கள் நீண்ட நேரம் பயன்படுத்துவதால் அவர்களுக்கு காது கேளாமை பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. இது குறித்து சுகாதார சேவைகள் இயக்குனர் ஜெனரல் பேராசிரியர் அதுல் கோயல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஆடியோ சாதனங்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் காது கேளாமை பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது.
இது ஒரு முக்கியமான உடல்நலம் சார்ந்த பிரச்சனையாகும். ஆனால் பெரும்பாலும் இதனை கவனிப்பது இல்லை. இது குறிப்பாக குழந்தைகளை பாதிக்கின்றது. ஆடியோ சாதனங்கள் மூலம் சத்தமான இசை மற்றும் பிற ஒலிகளை நீண்ட நேரம் கேட்பதால் காதுகேளாமை பிரச்சனைக்கு வழிவகுக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாநில அரசும், மருத்துவக் கல்லூரிகளும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதோடு குழந்தைகள் செல்போன் பயணப்படுத்தும் நேரத்தை குறைக்க வேண்டும். அவர்கள் தொடர்ந்து செல்போனை பயணப்படுத்துவதால் அவர்களுடைய மூளையில் பாதிப்பை ஏற்படுத்தி, அவர்களின் அறிவாற்றலை பாதிக்கக்கூடும்.
அனைவரும் 50 டெசிபல்களுக்கு மிகாமல், 2 மணி நேரத்திற்கு மேல் ஒலி அளவு கொண்ட ஆடியோ சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவற்றை பயன்படுத்த போது, அடிக்கடி இடைவெளிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
குறைந்த ஒலிகளில் மட்டுமே ஆடியோ இயக்கப்பட வேண்டும். இரைச்சல் இல்லாத ஹெட்போன்களை பயன்படுத்த வேண்டும். குழந்தைகள் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகும் போது, அதிகமான ஒலி எழுப்புவதை கட்டுப்படுத்த மாநில அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் சமூக ஊடகங்களின் பயன்பாட்டை குறைக்கவும் அறிவுறுத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.