
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆனால் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். இதனால் மாற்று வீரர்களை தேர்வு செய்யும் நிலைக்கு பிசிசிஐ தள்ளப்பட்டு உள்ளது. அதேபோன்று புதிய கேப்டனை நியமிக்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற உள்ள டெஸ்ட் போட்டியில் இந்தியா அணிக்கு சுப்மன் கில் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் செயல்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோன்று இந்த டெஸ்ட் தொடரில் பல வீரர்களும் இந்திய அணிக்கு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கிட்டத்தட்ட 18 மாதங்கள் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி இருந்த வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூர் இந்த தொடரில் இடம் பெறுவார் என்றும் கூறப்படுகிறது.