இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் சமீபத்தில் தனது 29 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது எனவும், தனது மனைவி சாய்ரா பானுவை பிரிவதாக தனது இணையதள பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் கலவையான கருத்துக்களை தெரிவித்து இருந்தனர். இந்த விவாகரத்து அறிவிப்பு குறித்து ஏ.ஆர். ரகுமானின் மகன் அமீன் தனது இணையதள பக்கத்தில் தங்களது இந்த கடுமையான நாட்களில் தங்களது தனி மனித உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஏ.ஆர். ரகுமான், சாய்ரா பானு விவாகரத்து குறித்து பலரும் அவதூறான கருத்துக்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஏ.ஆர். ரகுமானின் வழக்கறிஞர் நர்மதா யூடியூப் வீடியோக்களுக்கும், சமூக வலைதளங்களுக்கும் நோட்டீஸ் ஒன்று வெளியிட்டு இருந்தார். இந்த நோட்டீஸில் கூறியதாவது, ஏ.ஆர். ரகுமான் மற்றும் சாய்ரா பானு விவாகரத்து குறித்து ஆதாரம் அற்ற அவதூறு பரப்பும் வீடியோக்கள் மற்றும் கருத்துக்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க வேண்டும். இல்லையெனில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ஏ.ஆர். ரகுமானின் தரப்பு அதிகாரப்பூர்வ நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டது.