விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அத்தியூர்திருக்கை தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி வரலாற்று துறை பேராசிரியர் ரமேஷ், வரலாற்று துறை முனைவர் பட்டம் ஆய்வாளர் இமானுவேல் ஆகியோர் கள ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது புதிய கற்காலத்தை சேர்ந்த இரண்டு கைக்கோடாரி கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது, அந்த கோடாரியின் ஒரு புறம் கூர்மையாகவும், மறுபுறம் தட்டையாகவும் இருக்கிறது. சுமார் 5000 ஆண்டுகள் பழமையான இந்த வகை கோடாரிகள் கற்காலத்தில் விலங்கு வேட்டைக்கும், கிழங்கு போன்ற இயற்கை உணவுகளை தோண்டி எடுப்பதற்கும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற புதிய கற்கால ஆயுதங்கள் மாங்குடி, கல்வராயன் மலை, மயிலாடும் பாறை, பையம்பள்ளி ஆகிய இடங்களில் கிடைத்துள்ளது என தெரிவித்தனர்.