
கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் பெரிய காஜியார் தெருவில் வசித்து வருபவர் பிரபாகரன் (29). இவர் காசு கடை தெருவில் மளிகை வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் இவரது கடைக்கு சிதம்பரம் நாட்டுப் பிள்ளை தெருவில் வசித்து வரும் பாலச்சந்திரன் (47) என்பவர் சம்பவநாளன்று இரவு மளிகை பொருட்கள் வாங்க வந்துள்ளார். பொருட்களை வாங்கிக் கொண்டு அதற்கு பணம் கொடுக்காமல் பாலச்சந்திரன் மறந்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவரை தொடர்ந்து வந்து பொருட்களுக்கு பணம் கொடுக்கும்படி பிரபாகரன் கூறியுள்ளார்.
இதன் காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இறுதியில் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டுள்ளனர். சண்டையை தடுக்க வந்த பிரபாகரனின் மனைவியை பாலச்சந்திரன் எட்டி தள்ளியதாக கூறப்படுகிறது. இந்த சண்டையில் கீழே விழுந்த பாலச்சந்திரனுக்கு தலையில் அடிபட்டுள்ளது. இதனால் அவர் கோபத்துடன் வீட்டிற்கு சென்று வீட்டில் உள்ள காரை எடுத்து வந்து கடையின் மீது ஏற்றி இடித்து நொறுக்கி உள்ளார். இதனால் கடை முழுவதும் சேதமடைந்தது. காரை முன்னும் பின்னுமாக இரண்டு முறை இயக்கியுள்ளார் இதனால் கடையுள்ளே இருந்த பிரபாகரன் மற்றும் அவரது மனைவி சினேகா, கடையில் வேலை செய்யும் நபர் ரவி மூவரும் கதறி உள்ளனர்.
இந்த விபத்தில் 3 பேருக்கும் படுகாயம் ஏற்பட்டுள்ளது. பாலச்சந்திரன் காரை வேகமாக முன் பக்கம் இயக்கிய போது அங்கிருந்த சிலர் காரின் கண்ணாடியை உடைத்து பாலச்சந்திரனை நிறுத்த முயற்சித்தனர். அப்பகுதி பொதுமக்கள் காரை தடுத்து நிறுத்தியுள்ளனர்.இது குறித்து அறிந்த சிதம்பரம் நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் காரை இயக்கிய பாலச்சந்திரன் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஃபார்மசி உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் என தெரியவந்தது.
அடுத்து காரை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். அதன் பின் பிரபாகரன் கொடுத்த புகாரின் பேரில் பாலச்சந்திரன் மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலச்சந்திரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டதால் அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் சிகிச்சை முடிந்தபின் அவர் கைது செய்யப்படுவார். அதுவரை காவல்துறை கண்காணிப்பில் இருப்பார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.