சிவகங்கை மாவட்டம் மடபுரத்தில் போலீஸ் விசாரணையின் போது காவலாளி அஜித் குமார் கொலை செய்யப்பட்டார். இளைஞர் அஜித்குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்த பேராசிரியை நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது பல்வேறு பண மோசடி புகாரின் கீழ் ஏற்கனவே வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள தகவல் வெளியானது.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதாவது 15 ஆண்டுகளுக்கு முன்பு நிகிதா, அவரது தாயார் மற்றும் குடும்பத்தினர் அரசு வேலை தான் வாங்கி தருவதாக கூறி பலரிடம் பல லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுகிறது. இந்நிலையில் திருமங்கலத்தைச் சேர்ந்த அவருடைய உறவினர் தெய்வம் என்பவர் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, மோசடியில் ஈடுபட்ட நிகிதா என் உறவினர் தான். 2 நாளில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி கடந்த 2010ம் ஆண்டு 9 லட்சத்தை அவர் மூலம் அவருடைய குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். இதே போன்று என் உறவினர் வினோத்திற்கு கிராம நிர்வாக அலுவலர் வேலைக்காக ரூ.7 லட்சம் என மொத்தம் 16 லட்சம் கொடுத்து ஏமாந்து விட்டோம். அந்த பணத்தை திரும்பி கேட்டபோது எங்களை மிரட்டி அனுப்பினர்.

நிகிதா என்னிடம் கடந்த 2006 ஆம் ஆண்டு பி.எட் மாணவியாக படித்தவர். முக்கிய பிரமுகர்கள், அவருடைய உதவியாளர்களை தங்களுக்கு தெரியும் என்று கூறி பலரையும் இந்த குடும்பத்தினர் ஏமாற்றிய வந்துள்ளனர். மதுரை மட்டுமின்றி கரூர், கோவை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடியில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

தற்போது திருப்புவனத்தில் நகை திருட்டு போனதாக கூறியிருப்பது கூட பொய்யானதாக இருக்கலாம் என்பது என்னுடைய கருத்து. இந்த மோசடியில் தொடர்புடைய நிகிதாவின் தந்தை ஜெயபெருமாள் துணை கலெக்டராக இருந்து ஓய்வு பெற்றவர் என்று அவர் கூறினார்.