இன்றைய காலங்களில் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். பொதுவாக அலுவலகங்களில் காலையிலிருந்து மாலை வரை பணி புரியும் பணியாளர்கள் தங்கள் வேலையில் மகிழ்ச்சியாக இருப்பது மிகவும் குறைவு. சமீபத்தில் gallup என்ற நிறுவனம் உலகளாவிய பணியிடத்தின் நிலை குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதில் குறிப்பாக இந்தியாவில் ஏராளமான ஊழியர்கள் தங்கள் வேலைகளில் அதிருப்தியுடன் இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், தெற்காசிய நாடுகளான ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அதிகமான அழுத்தத்திற்கு ஆளாகுவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் வாரத்தின் முதல் நாள் திங்கள்கிழமை முதல் அனைத்து நாட்களிலும் அலுவலகத்திற்கு செல்லும் போது கோபப்படுவது, எரிச்சல் அடைவது, விடுமுறை நாட்களுக்காக காத்திருப்பது, அலுவலகப் பணிகளில் ஈடுபாடு குறைவு போன்ற பல விஷயங்கள் தெரியவந்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, கடந்த 2024 ஆம் ஆண்டில் உலக அளவில் அலுவலகங்களில் வேலை செய்யும் பணியாளர்களின் ஈடுபாடு 23% ஆக இருந்த நிலையில் தற்போது அது 21% ஆக குறைந்துள்ளது. அலுவலகங்களில் ஊழியர்கள் ஈடுபாடு 2% குறைவது என்பது உற்பத்தி திறனில் பெரும் குறைவை ஏற்படுத்தும் இதனால் உலக பொருளாதாரம் 438 பில்லியன் டாலர் இழப்பை சந்திக்கும் எனவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

அதிலும் குறிப்பாக இந்தியாவில் பணியாளர்களின் ஈடுபாடு கடந்த ஆண்டு 33% ஆக இருந்தது தற்போது 30% ஆக குறைந்துள்ளது. அந்த ஆய்வில் கணக்கெடுக்கப்பட்ட மக்களின் 30% பேர் தினமும் மன அழுத்தத்தை அனுபவிக்கின்றனர். மேலும் இந்திய ஊழியர்களில் கிட்டத்தட்ட பாதிக்கு அதாவது 49% இந்தியர்கள் புதிய வேலையை தேடுவதில் தீவிரமாக இருக்கின்றனர் என கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் வகிக்கும் பதவி மிகவும் அதிருப்தியை ஏற்படுத்துவதே ஆகும்.