
சென்னை காவல்துறை ஆணையர் அருணின் பெயர் மற்றும் புகைப்படத்தை தவறாகப் பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் மக்களை ஏமாற்ற முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளமான X இல் ஒருவர் பகிர்ந்துள்ள புகாரின்படி, +92 எனத் தொடங்கும் பாகிஸ்தான் நாட்டின் செல்போன் எண்ணைக் கொண்ட ஒரு வாட்ஸ்அப் கணக்கின் தனிப்பயன் படத்தில் (DP) சென்னை காவல்துறை ஆணையர் அருணின் புகைப்படம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த கணக்கிலிருந்து, பல்வேறு நபர்களுக்கு செய்திகள் அனுப்பப்பட்டு மோசடி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த புகார் தெரிவிக்கிறது.
இந்த புகாரின் மீது விசாரணை மேற்கொள்ளப்படும் என சென்னை காவல்துறையின் அதிகாரப்பூர்வ X பக்கத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சைபர் குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், சமூக வலைதளங்களில் மக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது. எனவே, சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அடையாளம் தெரியாத எண்களிலிருந்து வரும் செய்திகளை நம்பாமல் இருக்க வேண்டும் என்றும், தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.