தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஆடுதுறை அருகே சூரியனார் கோவில் ஆதீனமாக ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பண்டார சுவாமிகள் (54) நிர்வாகம் செய்து வந்தார். இவர் கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பெங்களூருவை சேர்ந்த ஹேமா ஸ்ரீ (47) என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் 12ஆம் தேதி மகாலிங்க சுவாமிகள் ஆதீன மடத்திலிருந்து வெளியேற வேண்டும் என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மகாலிங்க சுவாமி சூரியனார் கோவில் ஆதின நிர்வாக பொறுப்புகளை அறநிலைத்துறை இடம் ஒப்படைத்து விட்டு யாத்திரையை மேற்கொண்டார்.

இந்நிலையில் மகாலிங்க சுவாமி மீண்டும் சூரியனார் கோவில் ஆதீனப் பொறுப்பை ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியானதை அடுத்து அப்பகுதி கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் கண்டன வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களையும் ஊர் சுற்று வட்டார பகுதிகளில் ஒட்டியுள்ளனர்.

அந்தப் போஸ்டரில் மகாலிங்க சுவாமியின் சமீப கால புகைப்படங்கள், திருமணம் குறித்து விமர்சனங்கள், அவரது மனைவியுடன் எடுத்த படங்கள் இடம்பெற்றிருந்தது. அவர் மீண்டும் சூரியனார் கோவில் ஆதீன பொறுப்பை ஏற்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்தப் போஸ்டர்கள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.