இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான், சீனா இடையிலான உறவுகள் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியுடன் சீன தலைநகர் பீஜிங்கில் நேற்று சந்தித்தார். இருவரும் பொருளாதார ஒத்துழைப்பு, முதலீட்டு பங்களிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக முக்கியமான ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பாக, சீனாவின் ‘பெல்ட் அண்ட் ரோடு’ திட்டத்தை பாகிஸ்தானிலும் விரிவுபடுத்துவது தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் நடந்துள்ளன. இந்த சந்திப்பின் போது, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான போர் நிறுத்த முயற்சியை வாங் யி பாராட்டினார். அதேவேளை, பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு சீனா உறுதுணையாக இருப்பதாகவும் சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன் பின்னணியில், சீனா தனது அரசியல் மற்றும் பொருளாதார தாக்கத்தை வலுப்படுத்தும் நோக்கத்தில் பாகிஸ்தானுடன் விரைவில் வர்த்தகப் பாதைகளை விரிவாக்கும் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. சமீபத்திய ஒப்பந்தங்கள் பாகிஸ்தான்-சீனா இடையே வேளாண், தொழில், நிதி முதலீடு உள்ளிட்ட பல துறைகளில் கையெழுத்தாகியுள்ளன. ஆனால் இதுபற்றி முழுமையான தகவல்களை இரு தரப்பும் வெளியிடவில்லை.

இந்த சந்திப்பின் போது, ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சருடனும் சீனா-பாகிஸ்தான் இணைந்து ஆலோசனை நடத்தியதாகவும், சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்தை அந்நாட்டுக்குள் விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த திட்டம், உலக நாடுகளை சீனாவுடன் போக்குவரத்து வழியாக இணைக்கிறது. ஆனால் இதன் மூலம் சீனா கடன் கொடுத்து பிற நாடுகளை பொருளாதார கட்டுப்பாட்டில் வைக்கும் நடவடிக்கை என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாடுகள் இதில் சிக்கிக் கொண்ட பின்னணியில், பாகிஸ்தான் இப்போது அதிகமாக சீனாவின் ஆட்சி நிழலில் செயல்படத் தொடங்கியுள்ளது என்பது கவலைக்குரிய நிலையாகும். இது இந்தியாவின் வர்த்தக, பாதுகாப்பு வட்டாரங்களில் தொடர்ந்து கவனிக்க வேண்டிய வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது.