சென்னையின் புறநகர் பகுதிகளில் ஒன்று புழல். இப்பகுதிக்கு அருகே உள்ள கதிர்வேடு பிரிட்டானியா நகரில் செல்வராஜ் (57) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி மாலா. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இவர்கள் வேலை காரணமாக இப்பகுதியில் வசித்து வந்தனர். செல்வராஜ் டிரான்ஸ்போர்ட்டில் வேலை பார்த்து வரும் நிலையில் இவர்களுக்கு 1 மகள், 2 மகன்கள் இருக்கிறார்கள். மகன் சுமன் ராஜ் (15), 10 ம் வகுப்பு படித்து வந்த நிலையில், கோகுல்ராஜ் (13) 8 ம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு நேரத்தில் 2 மகன்களும் தனது தந்தையுடன் தூங்கினர். மகள் இதயா தாயுடன் தூங்கியுள்ளார். மறுநாள் காலை மாலா பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று அறையின் கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர் உடனடியாக அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது செல்வராஜ் தனது இரு மகன்களுடன் விஷமருந்திய நிலையில் வாயில் நுரை தள்ளியபடி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனை கண்ட மாலா மற்றும் அவரது மகள் அதிர்ச்சயடைந்த நிலையில் கதறி அழுதனர். இந்த தகவல் உடனடியாக காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 3 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்திய போது கடன் தொல்லையால் செல்வராஜ் தனது இரு மகனுடன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.