
2023 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் நடந்தது. அதில் ஒன்று உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சந்திராயன் 3 விண்கலத்தை நிலவுக்கு ஏவியது. பல்வேறு நாடுகள் நிலவு குறித்து ஆராய்ச்சி செய்ய செயற்கைக்கோள்களை அனுப்பி வைத்துள்ளது. அதில் சில வெற்றி பெற்றது. ஆனால் இதுவரை நிலவின் தென் துருவத்தில் எந்த நாடும் தடம் பதித்தது இல்லை. அப்படி இருக்க நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவு தளத்திலிருந்து ஜூலை 14-ஆம் தேதி சந்திராயன் 3 விகலம் எல்விஎம்3 எம்4 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.
சந்திராயன் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் விழுப்புரத்தை சேர்ந்தவர். சந்திராயன் 3 விண்கலத்தை அனுப்புவதற்கு 615 கோடி செலவு செய்யப்பட்டது. வெற்றிகரமாக தனது பயணத்தை தொடங்கிய சந்திராயன் 3 ஆகஸ்டு 1-ஆம் தேதி நிலவின் சுற்றுவட்ட பாதையில் நுழைந்தது. இதனை அடுத்து ஆகஸ்ட் 5-ஆம் தேதி நிலவின் சுற்றுவட்ட பாதை குறைக்கப்பட்டது. ஆகஸ்ட் 6-ஆம் தேதி இரண்டாவது தடவையாக சுற்றுவட்ட பாதை குறைக்கப்பட்டு சந்திராயன் 3 நிலவின் வீடியோவை வெளியிட்டது.
இதனையடுத்து ஆகஸ்ட் 14-ஆம் தேதி நிலவின் சுற்றுப்வட்ட பாதையில் சந்திராயன் 3 சுற்றி வந்தது. ஆகஸ்ட் 17-ஆம் தேதி சந்திராயன் விண்கலத்தின் உந்து கலனிலிருந்து லேண்டர் கருவி வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. ஆகஸ்ட் 20-ஆம் தேதி மீண்டும் லேண்டர் சாதனத்தின் சுற்றுவட்ட பாதை குறைக்கப்பட்டது. இஸ்ரோ திட்டமிட்டபடி சந்திராயன் 3 விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவப் பகுதியில் 70 டிகிரி அட்ச ரேகையில் பாதுகாப்பாக தரையிறங்கியது. அதன் பிறகு 2 மணி நேரம் கழித்து லாண்டருக்கும் இஸ்ரோவிற்கும் தொடர்பு உருவானது.
விக்ரம் லேண்டர் நிலவின் தென் துருவ தரைப்பகுதியை புகைப்படம் எடுத்து இஸ்ரோவிற்கு அனுப்பியது. இதனை தொடர்ந்து லேண்டரிலிருந்து வெளியே வந்த பிரக்யான் ரோவர் சுமார் 14 நாட்களுக்கு நிலவின் மேற்பகுதியில் ஆய்வு மேற்கொண்டது. ஆறு சக்கரங்கள் உடைய பிரக்யான் ரோவர் ஒவ்வொரு நாளும் 500 மீட்டர் தூரத்திற்கு நிலவின் பரப்பில் ஊர்ந்து சென்றது. நிலவின் மேற்பரப்பை பற்றியும், அதில் இருக்கும் கனிம வளங்கள் குறித்து ஆய்வு செய்வதை பிரக்யான் ரோவரின் முக்கிய பணி.
முதல் ஆய்வாக நிலவின் பரப்பில் லேசர் ஒளி கற்றை செலுத்தப்பட்டு மணல் மற்றும் பாறைகளில் உள்ள இரசாயன கலவையை ஆய்வு செய்தது. பூமியைப் போல நிலவில் நில அதிர்வுகள் ஏற்படுமா என்ற ஆய்வையும் பிரக்யான் ரோவர் நடத்தியது. ரோவரில் இருந்து பெறப்பட்ட தகவல்கள் விக்டர் லேண்டர் மூலம் பெங்களூரில் இருக்கும் இஸ்ரோ ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சூரிய ஒளி இருக்கும் 14 நாட்களும் ஆய்வு மேற்கொண்டு பிரக்யான் ரோவர் தனது பணியை சிறப்பாக நிறைவு செய்தது. நிலவின் தென் துருவத்தில் எந்த நாடும் தடம் பதிக்காத நிலையில் இந்தியா முதல் நாடாக சாதனை படைத்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவிற்கு அடுத்தபடியாக விண்வெளி ஆராய்ச்சியில் உலக நாடுகளுக்கு இந்தியா முன்னோடியாக எழும் தருணம் உருவாகியுள்ளது. சந்திராயன் 3 திட்டத்தின் மூலம் எந்த நாடும் நிகழ்த்தாத சாதனையை நிகழ்த்தி இந்தியா சாதனை படைத்துள்ளது.