
மதுரை மாவட்டத்தில் உள்ள திடீர் நகர் பகுதியில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்தார். இவர் காவலர்கள் தன்னை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மிரட்டியதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பான வீடியோ காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது. அதனை ஆய்வு செய்ய வேண்டும் என அவரது மனுவில் கோரியிருந்தார். இந்நிலையில் புகாரின் அடிப்படையில் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது அதில் சில நாட்களுக்கான பதிவுகள் தரவில் இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நீதிமன்றம், காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்கள் குறித்த விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிடப்பட்டது. அதன் பேரில் அரசு அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் ரூ.38 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது. மேலும் 1578 காவல் நிலையங்களில் 12 முதல் அதிகபட்சமாக 18 மாதம் வரை பதிவுகளை சேமிக்கும் விதமாக நவீன கேமராக்கள் பொருத்தம் பணி தொடங்க இருப்பதாகவும் அரசு கூறியுள்ளது.