
ஒடிஷா மாநிலத்தின் ஜாஜ்பூர் மாவட்டத்தில், காரொன்று மோட்டார் சைக்கிளை மோதி விபத்து ஏற்பட்டு, தம்பதியர் இருவரும் உயிரிழந்தனர். ஆனால், அவர்களுடன் பயணித்த நான்கு வயது சிறுவன் அதிஷ்டவசமாக உயிர்தப்பிய சம்பவம் சனிக்கிழமை நிகழ்ந்தது. ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள பனிகோயிலி போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலை எண்-16 அருகே உள்ள டோல்கேட்டின் அருகாமையில் இந்த விபத்து நடந்தது.
குவாக்கியா பகுதியில் இருந்து பனிகோயிலி நோக்கி தம்பதியரும், அவர்களது மகனும் பயணித்துக்கொண்டு இருந்தபோது, ஒரு காரு அவர்களது இருசக்கர வாகனத்தை மோதி விட்டு வண்டியை நிறுத்தாமல் தப்பிச் சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விபத்தில் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கணவர் தீவிர காயமடைந்து மருத்துவமனைக்குச் அழைத்து செல்லப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவன் சிறிய காயங்களுடன் உயிர்தப்பிய நிலையில், தற்போது பனிகோயிலி போலீசாரின் பராமரிப்பில் இருக்கிறார். விபத்துக்கான காரணம் மற்றும் தப்பிச் சென்ற காரை கண்டறிய, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த தம்பதியின் அடையாளம் காணும் பணியும் நடைபெற்று வருகிறது.