சென்னை மேற்கு மாம்பலத்தில் மாட்டுப்பொங்கலையொட்டி கோ பூஜை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, எனது தந்தை ஒரு சந்நியாசியிடம் சென்று எனக்கு காய்ச்சல் அடிக்கிறது நான் மருத்துவரை பார்க்கவா என்று கேட்டார். அதற்காக அதெல்லாம் வேண்டாம் பசுமாட்டு கோமியம் குடித்தால் காய்ச்சல் சரியாகிவிடும் என்று கூறினார். உடனடியாக அவர் கோமியத்தை பருகினார்.

அடுத்த 15 நிமிடத்தில் அவருக்கு காய்ச்சல் சரியாகிவிட்டது. கோமியம் மிகப்பெரிய மருந்து, பிணிகளை நீக்கும் உடல் பாதிப்புகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை எதிர்க்கும் சக்தி அதில் உள்ளது. அதனால் அவ்வப்போது கோமியத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார். இந்த கருத்து நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கோமியம் குடித்தால் காய்ச்சல் சரியாகும் என அறிவியலுக்கு புறம்பான கருத்தை பேசிய காமகோடிக்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு மாணவர் கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கோமியம் (மாட்டு சிறுநீர்) குடித்தால் காய்ச்சல் சரியாகுமென அறிவியலுக்குப் புரம்பான கருத்தை பேசிய சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் காமகோடிக்கு கண்டனம். தன் பேச்சுக்கான ஆதாரத்தை அவர் வெளியிட வேண்டும். தவறும் பட்சத்தில் தான்  பேசியது தன்னுடைய சொந்த கருத்து என்றும், அறிவியல்படி தவறு என்றும் பொதுவெளியில் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மாணவர் கழகம் தெரிவித்துள்ளது.